அழுகணிச் சித்தர் பாடல்கள்
கலித்தாழிசை
மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
பாடிப் படித்து - ஆத்தாடி
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
புத்தி கலங்கியடி - ஆத்தாடி
பதித்தறியாமல் - ஆத்தாடி
தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .
(முடிந்தது)
0 comments:
Post a Comment