திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Saturday, October 16, 2010

பார்ப்பதிப் படலம் (375 - 410)

பார்ப்பதிப் படலம் (375 - 410)

375 அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல்
உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத்
தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே
முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள்.
1
376 கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்
தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப்
பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச்
சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான்.
2
377 ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே
ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந்
தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன்
நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள்.
3
378 மன்னுயி ராகிய மரபு முற்றவும்
முன்னுற அருளிய முதல்வி யன்பினால்
இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத்
தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான்.
4
379 பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற்
சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ
இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின்
புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால்.
5
380 நற்றிற மேலுது நங்கை சிந்தனை
முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின்
சுற்றம தாகிய இமையத் தொல்வரைக்
கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம்.
6
381 ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன்
மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே
காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால்
ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ.
7
382 தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான்
இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன்
உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை
வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம்.
8
383 அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர்
கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும்
இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம்
மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா.
9
384 கடல்விட முண்டிடு கடவு ளித்திறம்
நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந்
தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே
விடையது பெற்றனள் விமலை யேகினாள்.
10
385 அல்லலு முவகையு மன்பு மெம்பிரான்
எல்லையி லருளுமா யீண்டி முன்செல
மெல்லியல் உமையவள் வௌ¢ளி வெற்பொரீஇ
வல்லையின் இமையமால் வரையிற் போயினாள்.
11
386 வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு
துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால்
எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை
வௌ¢ளியங் கிரியென விளங்கு கின்றதே.
12
387 எண்டகு மிமையமு மிமைய மேலுறு
கொண்டலு மொன்றியே குலவு காட்சிய
தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ்
சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால்.
13
388 நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு
மேலுற விளங்கிய இமைய வெற்பது
மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில்
பாலுறு பன்னகப் பாயல் போன்றதே.
14
389 கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே
இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை
சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட
அரும்பவி ழாதவெண் கமல மன்னதே.
15
390 நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்
பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான்
மூடினள் வைத்திடு முறைய தேயெனக்
கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே.
16
391 பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர்
துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு
அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால்
என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை.
17
392 குடகடல் குணகடல் கூடு றாவகை
இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே
தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை
நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே.
18
393 விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக்
கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல்
உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே.
19
394 அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந்
தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும்
முன்னுற வருந்தவம் முயன்று வைகினான்.
20
395 மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய
அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற்
பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்
எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள்.
21
396 வேறு
ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை
நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா
ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன்
ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான்.
22
397 கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி
உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன
வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத்
துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான்.
23
398 பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது
செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித்
துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு
மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ.
24
399 கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர்
அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம்.
எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா
வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள்.
25
400 சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும்
பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம்
நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள
கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ.
26
401 பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம்
விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம்
அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி
வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள்.
27
402 வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப்
புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா
அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன்
மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான்.
28
403 மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம்
அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள்
தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக்
கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே.
29
404 இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி
ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந்
தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச்
சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள்.
30
405 நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான்
நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின்
ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப்
பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான்.
31
406 அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த
தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற
நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக்
கன்னிகை நகைத்துக் கேண்மோ இ·தெனக் கழற லுற்றாள்.
32
407 ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால்
ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப்
பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன
நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான்.
33
408 மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில்
அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித்
தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக்
கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான்.
34
409 நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி
மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர்
பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச்
சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள்.
35
410 தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின்
மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால்
அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய
வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன்.

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design