திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Saturday, October 16, 2010

வரைபுனை படலம் (690 - 725)

690 8. வரைபுனை படலம்
கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம்
மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும்
விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும்
எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே.
1
691 கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை
உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை
மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம்
பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான்.
2
692 உன்னிய போதினி லும்பர் கம்மியன்
மன்னவன் எதிருற வந்து கைதொழு
தென்னைகொல் கருதினை யாது செய்பணி
அன்னதை மொழிகென அறைதல் மேயினான்.
3
693 என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும்
அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக்
கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப்
பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான்.
4
694 அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்
செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன்
மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர்
ஒப்பனை செய்திட வுன்னி னானரோ.
5
695 நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப்
பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை
மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும்
பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல்.
6
696 மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை
நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம்
பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை
தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான்.
7
697 நீக்கமில் கதலிகை நெடிய கேதனம்
மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை
ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத்
தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும்.
8
698 குரகத முகம்புரை குலைகள் தூங்கிய
மரகத வொளிபடு வாழை பூகநல்
நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்
விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான்.
9
699 ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும்
விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும்
அண்ணறன் கோயிலு மாக வீதிகள்
எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான்.
10
700 ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன்
இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந்
தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள்
திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன்.
11
701 ஆயிரப் பத்தென அறையும் யோசனை
போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக்
கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம்
வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான்.
12
702 அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின்
மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச்
செங்கன கத்தினால் திகழச் செய்தனன்
கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல்.
13
703 சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம்
மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே
கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க்
கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன்.
14
704 வானவில் மணிமுகில் வனச மாமலர்
நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம்
ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை
ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே.
15
705 கண்ணடி பூந்தொடை கவரி ப·றுகின்
மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்
பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்
விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே.
16
706 தேவரு முனிவருந் திருவ னார்களும்
பாவையின் உயிருறு பண்பி னாக்கியே
மேவரு கவரிதார் வீணை யேந்தியே
ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான்.
17
707 பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள்
தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்
பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன்
விண்ணவர் அரம்பையர் யாரும் வெ·கவே.
18
708 நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்
பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர்
ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட
அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான்.
19
709 குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்
நிறைதரு மிந்திர நீலத் தாலொரு
திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன்
இறைவனு மிறைவியும் இனிது மேவவே.
20
710 குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர்
மண்டல மானதும் வகுத்து வேள்விசெய்
பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்
எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ.
21
711 கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம்
ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம்
முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால்
மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான்.
22
712 காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல
ஓவறு முற்பல வோடை யோர்பல
பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல
வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான்.
23
713 பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங்
பாசறு நன்மணி கனக மன்னதால்
தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம்
வாசவன் கண்டுள மருளத் தந்தனன்.
24
714 கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே
பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய
பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை
நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ.
25
715 இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம்
முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்
பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய
மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான்.
26
716 சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை
மாதவ முனிவரர் மடந்தை மாரொடு
காதலின் உமைமணங் காண வந்திடத்
தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ.
27
717 ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங்
குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால்
பற்றலர் புரமடு பரமற் போற்றியே
மற்றவன் றன்னொடு வருது மென்றனர்.
28
718 வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங்
கொற்றவை யாமளை குழீஇய காளிகள்
சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி
உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார்.
29
719 செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி
பந்தமில் தாபத பன்னி யாயுளார்
அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை
வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால்.
30
720 பங்கய மிசைவரு பாவை யேமுதல்
நங்கையர் யாவரும் நற்ற வத்தினால்
அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா
அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர்.
31
721 நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக்
குறையுள தாகிய உமைதன் மெய்யினைக்
குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர்
இறைவனை வழிபடும் இயல்பி னாரென.
32
722 மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்
ஆதிய வாகிய அலகில் சுற்றமும்
ஓதருங் கடல்களும் அரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே.
33
723 வேறு
ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்
பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வௌ¢ளி
ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல்
பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான்.
34
724 ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான்.
35
725 அல்லுறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே
எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ்
செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி
வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான்.

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design