திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Tuesday, October 5, 2010

திருமூல நாயனார் ஞானம்

திருமூல நாயனார் ஞானம்


அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

(முடிந்தது)

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design