திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Saturday, October 16, 2010

மோன நீங்கு படலம் (602 - 636)

602 இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்
விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்
கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்
சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம்.
1
603 சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர்
பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள்
விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த
மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார்.
2
604 மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக
எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான்
பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான்
ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார்.
3
605 பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த
ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான்
காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம்
ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார்.
4
606 எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும்
அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட்
புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித்
தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார்.
5
607 நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்
துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல்
தஞ்ச மாருளர் தாதையே யல்லது* தனயர்க்கே.
( பா-ம் * - தாதைய ரல்லது. )
6
608 கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண்
டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண்
நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி
மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ.
7
609 தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை
ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை
நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம்
உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல்.
8
610 நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்
போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய்
தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ
ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ.
9
611 எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால்
நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி
அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே
சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே.
10
612 கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத்
திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌ¤வில்லேம்
அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய்
இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ.
11
613 ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின்
பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி
வீர னைக்கொடு தடிந்தனை அ·தென மிகவெய்ய
சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார்.
12
614 முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்
உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே
அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக
இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே.
13
615 எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன்
வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன்
கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன்
தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான்.
14
616 கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித்
தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம்
வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றனன் வறிதேனும்
அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான்.
15
617 சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும்
வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப்
பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர்
ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார்.
16
618 பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம்
நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ
அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும்
வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே.
17
619 செய்ய லாவதொன் றின்றியே மகிழச்சியிற் றிளைத்தொராய்
மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண்
டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தொரும்
உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன்.
18
620 வேறு
வண்டுளர் கமலமேல் மதலை வாசவன்
அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே
பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற்
கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார்.
19
621 விண்மதி படர்சடை வேத கீதனை
அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய
உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர்
கண்மல ரதனொடு கழல்கள் சேரவே.
20
622 வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா
பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும்
உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும்
அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே.
21
623 பேருக மளப்பில பெயர்த லின்றியே
சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங்
காருறழ் கந்தரக் கடவுள் நீயலா
தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார்.
22
624 ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்
சேயினை யருளுவான் சிமைய மாகிய
மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்
மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ.
23
625 என்றிவை கூறியே யாரு மெம்பிரான்
மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும்
மின்றிகழ பசுங்கதிர் மிலைச்சும் வேணியான்
நன்றென இசைந்தியை நவிறல் மேயினான்.
24
626 புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர்
உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய
மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும்
இங்கினி யாவரு மேகு கென்றனன்.
25
627 முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ்
செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந்
தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே
விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார்.
26
628 வேறு
அன்னார் விடைகொண் டேகியபின் அதுகண் டிரதி யெம்பெருமான்
முன்னா விறைஞ்சிப்* போற்றிசெய்து முறையோ முறையோ இறையோனே
பொன்னார் கமலத் தயன்முதலோர் புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே
உன்னால் முடிந்தான் அவன்பிழையை உளங்கொ ளாமல் அருளென்றாள். 27
( பா-ம் * - முன்னாலிறைஞ்சிப் )
27
629 வேறு
இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்£ந்த
புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள்
வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோ தில்
உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான்.
28
630 தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத் தளரேலென்
றின்ன வாறருள் செய்தலும் மகிழந்தடி இறைஞ்சிப்போய்ப்
பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றான்
வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல்.
29
631 வேறு
தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட
அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்
இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்
உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான்.
30
632 மனந்தனி லித்திறம் மதித்து வானதி
புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்
சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்
இனந்தரு முனிவரை இனிது நோக்கினான்.
31
633 நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ்
சொன்னடை யன்றது துயர நீங்கியே
இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை
உன்னுத லேயென உணர வோதினான்.
32
634 கட்படும் இமைத்துணை காட்சி யோகினை
நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன்
ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும்
தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர்.
33
635 அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர்
சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை
வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே
உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர்.
34
636 போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி
ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ
மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச்
சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை.

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design