திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Tuesday, October 5, 2010

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்



ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
காசிக் கலம்பகம்


காசிக் கலம்பகம்


    காப்பு
    நேரிசை வெண்பா
    பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி

    நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
    காரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த
    ஓரானை வந்தெ னுளத்து.
    1

    மயங்கிசைக் கொச்சக்கலிப்பா
    --- தரவு ---


    நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான

    கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க
    இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்
    சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்
    கண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்
    விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். .......(1)

    நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்

    கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே
    பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை
    வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட
    உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை
    வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. .......(2)

    --- தாழிசை ---


    நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ

    தோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே. .......(1)

    என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்

    முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே. .......(2)

    செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்

    றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே. .......(3)

    பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்

    எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே. .......(4)

    நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை

    மணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே. .......(5)

    முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்

    கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. .......(6)

    --- அராகம் ---


    உளதென விலதென வொருவரொ ரளவையின்

    அளவினி லளவிட லரியதொ ருருவினை. .......(1)

    இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்

    அதுவல வெனுமெனி னெவருனை யறிபவர். .......(2)

    அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்

    எவனவ னிவனென வெதிர்தரு தகைமையை. .......(3)

    அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு

    நெறியல தொருவரு மறிவரு நிலைமையை. .......(4)

    --- நாற்சீரோரடி அம்போதரங்கம் ---


    ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.

    பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.
    எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.
    தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.

    -- முச்சீரோரடி அம்போதரங்கம் --


    வடவரை குழைய வளைத்தனை.

    மலைமகண் முலைக டிளைத்தனை.
    விடமமிர் தமர விளைத்தனை.
    விசயனொ டமர்செய் திளைத்தனை.
    வரிசிலை வதனை யெரித்தனை.
    மதகரி யுரிவை தரித்தனை.
    அருமறை தெரிய விரித்தனை.
    அலகில்பல் கலைக டெரித்தனை.

    -- இருசீரோரடி அம்போதரங்கம் --

    அழல்வி ழித்தனை பவமொ ழித்தனை.
    ஆற ணிந்தனை மாற ணிந்தனை..
    மழுவ லத்தினை முழுந லத்தினை.
    மாந டத்தினை மானி டத்தினை..
    அலகி றந்தனை தலைசி றந்தனை..
    அருள்சு ரந்தனை இருடு ரந்தனை..
    உலக ளித்தனை தமிழ்தெ ளித்தனை.
    ஒன்று மாயினை பலவு மாயினை..

    -- தாழிசை --

    அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்

    கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே. .......(1)

    பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்

    கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. .......(2)

    அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்

    விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே. .......(3)

    இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்

    அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே. .......(1)

    எனவாங்கு


    -- சுரிதகம் --


    உலகுசூற் கொண்ட தலைவியு நீயும்

    மலைபக வெறிந்த மழவிளங் குழவியை
    அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்
    வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்
    கண்களிற் பருகியக் காமரு குழவி
    எழுதாக் கிளவி யின்சுவை பழுத்த
    மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்
    செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்
    புன்மொழிக் கடுக்கொளப் புகட்டினன்
    இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே.
    2

    நேரிசை வெண்பா
    உடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின்

    அடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர்
    செவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை
    எவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம்.
    3

    தூது
    கட்டளைக் கலித்துறை
    இறைவளைக் காகம் பகுந்தளித் தாரகி லேசர்கொன்றை

    நறைவளைக் கும்முடி யாரடிக் கேகங்கை நன்னதியின்
    துறைவளைக் குங்குரு கீருரு கீரென்று தூமொழிகைக்
    குறைவளைக் கும்முங்கள் பேரிட்ட தாற்சென்று கூறிடுமே.
    4

    புயவகுப்பு
    சந்த விருத்தம்
    இடமற மிடைதரு கடவுளர் மடவியர்

    எறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன
    இனவளை கொடுமத னிடுசய விருதென
    இறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன
    இருவரு நிகரென வரிசிலை விசயனொ
    டெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன
    இணையடி பரவிய மலடிமு னுதவிய
    இடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன
    படவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்
    பருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன
    பருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்
    பனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன
    படரொளி விடுசுடர் வலயம தெனவொரு
    பருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன
    பரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்
    பணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன
    மடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு
    மதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன
    வழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்
    வருநர கரியின்ம தத்தைத் தடிந்தன
    மதகரி யுரியதள் குலகிரி முதுகினின்
    மழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன
    மலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ
    மதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன
    குடவளை துறைதொறு முடுநிரை யெனவரி
    குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை
    குலவிய படர்சிறை மடவன மொடுசில
    குருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு
    குரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்
    கொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு
    குலகிரி யுதவிய வளரிள வனமுலை
    கொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே.
    5

    நேரிசை வெண்பா
    புயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய

    கயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவி
    உய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்
    வையத் துதியார் மறுத்து.
    6

    கட்டளைக் கலித்துறை
    மறைக்கோலங் கொண்ட வகிலேச

    ரேயின்று மாதர்முன்னே
    பிறைக்கோலங் கொண்டு புறப்பட்ட
    வாமுன் பிறைமுடித்த
    இறைக்கோல மோல மெனத்தேவ
    டோல மிடவிருண்ட
    கறைக்கோலங் கொண்டு நும்கண்டத்
    தொளித்த கனல்விடமே.
    7

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    விடுத்த வாளிக்கும் விரகிலாக்

    கருப்புவில் வீணன்மீ ளவும்வாளாத்
    தொடுத்த வாளிக்கு மேபகை
    மூண்டதித் தூயநன் மொழிக்கென்னாம்
    அடுத்த நான்மறை முனிவரர்
    நால்வர்க்கு மம்மறைப் பொருள்கூற
    எடுத்த கோலமா யானந்த
    வனத்துமெம் மிதயத்து முருந்தோனே.
    8

    கட்டளைக்கலித்துறை
    இருப்பா ரவிமுத்தத் தெங்கேகண்

    மூடுவ ரென்றும்வெள்ளிப்
    பொருப்பாள ரோடித் திரிவதெல்
    லாமிப் புவனங்களை
    உருப்பாதி யிற்படைத் தோர்பாதி
    யிற்றுடைத் தூழிதொறும்
    விருப்பா ருயிர்களின் மேல்வைத்துத்
    தாஞ்செயும் வேலைகண்டே.
    9

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    கண்ணொன்று திருநுதலிற் கனலுருவ

    மாப்படைத்த காசி நாதா
    தண்ணொன்று நறையிதழித் தாரென்றா
    ணெட்டுயிர்த்தா டரைமேல் வீழ்ந்தாள்
    எண்ணொன்று முணராமே கிடக்கின்றா
    ளிதுகண்டா லெழுத்தொன் றோதத்
    துண்ணென்று வருவரெனத் துணிந்தனளோ
    வறியேனித் தோகை தானே.
    10

    நேரிசை வெண்பா
    தோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்

    வாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்
    காமாந் தகர்காசிக் கண்ணுதலார்க் கோதீர்மற்
    றேமாந் திராம லெடுத்து.
    11

    கட்டளைக்க்லித்துறை
    எடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக்

    கடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்து
    கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரி
    மடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே.
    12

    அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    கொழுதி வரிவண் டுழுதுழக்குங்

    குழலீர் நறுங்கட் கோதையிவள்
    அழுத விழிநீர் முந்நீரை
    யுவர்நீ ராக்கு மதுகூறீர்
    எழுத வரிய திருமார்பி
    லிளஞ்சேய் சிறுசே வடிச்சுவடும்
    முழுது முடையாண் முலைச்சுவடு
    முடையார் காசி முதல்வர்க்கே.
    13

    நேரிசை வெண்பா
    வரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார்

    நிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற்
    குவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை
    அவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார்.
    14

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    ஆர்க்கும் படைவே ளரசிருப்பென்

    றஞ்சா தடிக ளருட்காசி
    ஊர்க்கும் புதுத்தோ ரணம்வைத்தா
    லுமக்கிங் கிவள்பேச் சுரைப்பாரார்
    வார்க்குங் குமப்பூண் முலைச்சுவட்டை
    வளையென் றோடி வளைந்துசுற்றிப்
    பார்க்குந் துளைமுள் ளெயிற்றுரகப்
    பணியீர் மோகந் தணியீரே.
    15

    பிச்சியார்
    கட்டளைக் கலிப்பா
    தண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர்

    தரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும்
    பெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற்
    பிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர்
    வெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால்
    வீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர்
    கண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற்
    கடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே.
    16
    காணுங் காணு நதிகளெல் லாம்புனற்
    கங்கை யேயங் குளதெய்வம் யாவையும்
    தாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்
    தலங்கள் யாவுந் தடமதிற் காசியே
    பூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்
    போது நன்மணி கர்ணிகைப் பூந்துறை
    பேணு மாறு பெறவேண்டு மப்புறம்
    பேயொ டாடினு மாடப் பெறுதுமே.
    17
    பெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்
    பிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே
    சுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்
    தோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்
    கற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்
    கற்பந் தோறுங் கடைநா ளுலகெலாம்
    செற்று மீளப் படைக்கவும் வேண்டுமே
    தேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே.
    18

    நேரிசை வெண்பா
    இல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்பச்

    செல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்லப்
    பரக்கின்ற புண்ணீர்ப் படுதலைகொண் டையம்
    இரக்கின்ற வாறென்சொல் கேன்.
    19

    கொச்சகக் கலிப்பா
    சொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே

    இல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே
    அல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக்
    கல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே.
    20

    கட்டளைக் கலித்துறை
    பிரானென் றவர்க்கொரு பெண்ணோடு

    மோடிப் பெருங்கருணை
    தராநின்ற காசித் தடம்பதி
    யார்வந்தென் றன்னகத்தே
    இராநின் றனரைம் புலக்கள்வர்
    கொள்ளையிட் டேகுதற்கே
    வராநின்ற போதுள்ள மாதனங்
    காத்து வழங்குதற்கே.
    21

    கொற்றியார்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    வழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்

    கொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே
    பழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்
    முழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே.
    22

    கட்டளைக் கலித்துறை
    முயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்

    கயலார் பெருந்தடங் கண்ணிபங் காரருட் காசியிலே
    செயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்
    பயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே.
    23

    கட்டளைக் கலிப்பா
    படுத்த பாயுட னேபிணி மூழ்கினும்

    பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்
    அடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்
    அப்பெ ரும்பதி யெப்பதி யென்பிரேல்
    விடுத்து விட்டிந் திரதிரு வும்புவி
    வெண்கு டைக்கு ளிடுமர சாட்சியும்
    கடுத்த தும்பு களத்தாரைத் தேடுவார்
    காத லித்து வருந்திருக் காசியே.
    24

    கட்டளைக் கலித்துறை
    திருக்கோலங் கொண்டநற் றேன்மொழி

    யாளெண்டிசையினுநின்
    உருக்கோல மேகண்டு கண்டிலன்
    போலு மொழுகுநறை
    மருக்கோல நீலக் குழல்சே
    ரவிமுத்த வாணதொல்லை
    இருக்கோல மிட்டுண ராயெங்கு
    மாகி யிருப்பதுவே.
    25
    இருகுங் குமக்குன்றும் பீர்பூப்பக்
    காம வெரியினினின்
    றுருகும் பசும்பொன்னுக் கோர்மாற்றுண்
    டேலுறை யாய்தொடுத்துச்
    செருகு நறுங்கொன்றை தேன்பிழிந்
    தூற்றச் சிறைச்சுரும்பர்
    பருகும் பொலஞ்சடை யாய்காசி
    வாழ்முக்கட் பண்ணவனே.
    26

    கலிநிலைத்துறை
    பண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாயிப்

    பெண்ணே ரொருவ னெய்கணை யைந்தும் பெய்தானால்
    உண்ணேர் நின்றா யின்னரு ளாலென் னுயிரன்னாள்
    கண்ணேர் நிற்றற் கொல்கி யொழிந்த கழுநீரே.
    27

    கட்டளைக்கலித்துறை
    கழியுந் தலைக்கலன் பூண்டாடுங்

    காசிக் கடவுணுதல்
    விழியு மிடக்கண்ணும் வெண்ணெருப்
    பேயவ் வீழியிரண்டிற்
    பொழியுங் கனல்விழி காமனைக்
    காம்ந்ததப் போரிலுடைந்
    தொழியும் படைகளென் றோவெமைக்
    காயுமற் றோர்விழியே.
    28

    மடக்கு
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    விழைகுவ தன்பர கஞ்சுகமே வெங்கரி

    யின்னுரி கஞ்சுகமே
    தொழிலடி கட்குள மாலயமே தூமுனி
    வோருள மாலயமே
    அழகம ரும்பணி யென்பணியே யாட்கொள
    மேற்கொள்வ தென்பணியே
    மழகளி றீன்ற வளம்பதியே வாழ்வது
    காசி வளம்பதியே.
    29

    மடக்கு
    கட்டளைக் கலிப்பா
    வண்ண மேனி யரும்பு வனங்களே

    வாசம் வாச மரும்பு வனங்களே
    நண்ணு மாலய மாதவ ரங்கமே
    ஞால மேழ்தரு மாதவ ரங்கமே
    தண்ணென் மாலை தருமருக் கொன்றையே
    தருவ தையர் தருமருக் கொன்றையே
    கண்ணி னிற்பர் மனத்திருக் கோயிலே
    காசி யேயவர்க் கோர்திருக் கோயிலே.
    30

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    திருகுசினக் கூற்றினெயிற் றிடைக்கிடந்துங்

    கடைநாளிற் றிரையே ழொன்றாய்ப்
    பெருகுமுழு நீத்தத்திற் றிளைத்தாடப்
    புணைதேடும் பேதை நெஞ்சே
    உருகிலைநெக் குடைந்திலைமொண் டானந்த
    வனத்தேனை யோடி யோடிப்
    பருகிலைகண் ணரும்பிலைமெய் பொடித்திலைமற்
    றுனக்கென்ன பாவந் தானே.
    31

    ஊர்
    நேரிசை வெண்பா
    பாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும்

    காவலரு மேடவிழ்க்குங் காசியே - தீவளரும்
    கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
    அஞ்சக் கரத்தா னகம்.
    32
    அகமே யவிமுத்த மையரிவர்க் காகம்
    சகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும்
    எண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும்
    கண்ணம் பரமே கலை.
    33

    அம்மானை
    தாழிசை
    கலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர்

    சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை
    சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்
    மலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை
    வழங்காரே வப்பாலு மாலானா லம்மானை.
    34

    கட்டளைக் கலித்துறை
    அம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமா

    எம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்
    நம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்
    சொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே.
    35

    கட்டளைக் கலிப்பா
    தூது கொண்டுந் தமைத்தோ ழமைகொண்ட

    தொண்டர் தண்டமிழ்ச் சொற்கொண்ட குண்டலக்
    காது கொண்டெங் கவிதைகொண் டாட்கொண்ட
    காசி நாதர் கருத்தே தறிகிலேம்
    போது கொண்டொரு பச்சிலை கொண்டுதாம்
    பூசை செய்திலர் புண்டரி கப்பதம்
    ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரே
    லிருவ ருக்குமற் றென்படு நெஞ்சமே.
    36

    சிந்து
    நேரிசை வெண்பா
    ஏடவிழ்பொற் கொன்றையகி லேசரன்பர்க் கேயிரும்பை

    ஆடகமாக் கிக்கொடுத்தோ மவ்வளவோ - நீடுதிறல்
    காட்டுமிமை யோர்க்கிருப்புக் கற்கனக மாக்கியண்ட
    ஓட்டினையும் பொன்னாக்கி னோம்.
    37

    நேரிசை யாசிரியப்பா
    பொன்னுருக் கன்ன பூந்துணர்க் கொன்றையும்

    வெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும்
    காந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்
    திரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில்
    வெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென .......(5)
    முழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை
    தோலடிச் செங்காற் பால்புரை வரிச்சிறைக்
    கிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத்
    துருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத்
    தொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே .......(10)
    கண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப்
    பெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து
    வெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப்
    பெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய்
    ஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண் .......(15)
    மின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர்
    ஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக்
    கயிறுகொண் டார்க்குங் காட்சித் தென்ன
    மரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும்
    கமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து .......(20)
    வீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப்
    பரமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து
    திரைபடு குருதித் திரடெறித் தென்ன
    முழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும்
    மங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர் .......(25)
    கங்கைசூழ் கிடந்த காசி வாணா
    ஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப
    மெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில்
    மாமுத றடிந்த காமரு குழவியும்
    பொழிமதங் கரையு மழவிளங் களிறும் .......(30)
    மூண்டெழு மானம் பூண்டழுக் கறுப்ப
    இடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி
    உலகமோ ரேழும் பலமுரை பயந்தும்
    முதிரா விளமுலை முற்றிழை மடந்தை
    ஒண்டொடித் தடக்கையின் வீசு நுண்டுகிற் .......(35)
    றோகையிற் பிறந்த நாகிளந் தென்றல்
    மோகமுந் தளர்ச்சியுந் தாகமுந் தணிப்ப
    மறைமுதற் பொருளி னிறைசுவை யமுதினை
    குஞ்சித வடிக்கீழ்க் குடியுருத் துகவே. .......(40)
    38

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    குடியிருக்கும் புன்குரம்பை குலைந்திடுநாட்

    கொலைக்கூற்றங் குமைத்த செம்பொன்
    அடியிருக்கும் பரந்தாமப் புக்கில்புகுந்
    தானந்த வமுத மாந்திக்
    கடியிருக்கு நறைக்குழன்முத் தித்திருவை
    முயங்கிடவுங் கடவேன் கொல்லோ
    துடியிருக்கு மிடையவளோ டவிமுத்தத்
    திருந்தபரஞ் சோதி யானே.
    39

    களி
    பதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    சோதி யொன்றிலொரு பாதி சக்தியொரு

    பாதி யும்பரம சிவமெனத்
    தொகுத்து வைத்தவவி முத்த நாயகர்
    துணைப்ப தம்பரவு களியரேம்
    ஓதி யோதி ளைப்பர் வேத
    முணர்த்து தத்துவ முணர்கிலார்
    உணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ
    ருண்மை வாசக முணர்த்துகேம்
    ஏதி னாலற மனைத்தி னும்பசு
    வினைப்ப டுத்தனல் வளர்த்திடும்
    யாக மேயதிக மென்ப தன்பர்த
    மிறைச்சி மிச்சிலதி லிச்சையார்
    ஆதி யாரறிவ ரதுகி டக்கமது
    வருந்தி லப்பொழுதி லேபெறற்
    கரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ
    ததும றுத்தவிர வில்லையே.
    40

    கட்டளைக் கலித்துறை
    இல்வாழ்வை விட்டு கதிவேட்

    டடைபவர்க் கேழைபங்கன்
    நால்வாழ்வை யேதருங் காசிப்
    பிரானறும் பூங்கடுக்கை
    வல்வார் முலைக்கொம்ப னாய்தந்தை
    தாண்மழு வாலெறிந்து
    கொல்வா ரொருவருக் கல்லா
    தெவர்க்குங் கொளற்கரிதே.
    41

    ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    கொள்ளையிடச் சிலர்க்குமுத்திச் சரக்கறையைத்

    திறந்துகொடுத் தனந்த கோடிப்
    பிள்ளைகள்பெற் றுடையபெரு மனைக்கிழத்திக்
    கேகுடும்பம் பேணு கென்னா
    உள்ளபடி யிருநாழி கொடுத்ததிலெண்
    ணான்கறமு மோம்பு கென்றார்
    அள்ளல்வள வயற்காசி யாண்டகையார்
    பெருந்தகைமை யழகி தாமே.
    42

    குறம்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    அழகு துயில்குங் குமக்கொங்கை

    யணங்கே யெங்க ளருட்காசிக்
    குழகர் மகற்கு மகட்கொடுத்த
    குடியிற் பிறந்த குறமகள்யான்
    ஒழுகு தொடிக்கைக் குறியுமுகக்
    குறியுந் தருமொள் வளைக்குறியும்
    புழுகு முழுகு முலைகுறியு
    முடையா ரவர்பொற் புயந்தானே.
    43

    கட்டளைக் கலித்துறை
    புயல்வண்ணக் கண்ணற் கொளித்தவக்

    கள்வன் புணர்ப்பையெண்ணாள்
    கயல்வண்ணக் கண்ணிதன் கண்ணினுட்
    புக்கது கண்டிருந்தும்
    செயல்வண்ணங் கண்டிலள் வாளாப்
    புறத்தெங்குந் தேடுகின்றாள்
    வயல்வண்ணப் பண்ணை யவிமுத்தத்
    தானை மனத்துள்வைத்தே.
    44

    மறம்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    வையமுழு தொருங்கீன்ற விடப்பாக

    ரானந்த வனத்தில் வாழும்
    வெய்யதறு கண்மறவர் குலக்கொடியை
    வேட்டரசன் விடுத்த தூதா
    கையிலவன் றிருமுகமோ காட்டிருகண்
    டொட்டுமுட்டைக் கதையிற் றாக்கிச்
    செய்யகொடி றுடைத்தகல்வாய் கிழித்தரிவோ
    நாசியொடு செவியுந் தானே.
    45

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    தாக்கு படைவேள் கணைமழைக்குத்

    தரியா திருகண் மழையருவி
    தேக்கு மிவட்கா னந்தவனத்
    திருந்தா ருள்ளந் திருந்தார்கொல்
    காக்க வரிய விளவாடைக்
    காற்றுக் குடைந்து கரந்துவச்சை
    மாக்க ளெனவே முடவலவன்
    வளைவா யடைக்கு மழைநாளே.
    46

    கட்டளைக்கலித்துறை
    மழைவளைக் கும்பொழிற் காசிப்

    பிரான்வெற்பில் வண்டறைபூந்
    தழைவளைக் கைக்கொடுத் தேன்கண்ணி
    லொற்றித் தளரிடைதன்
    இழைவளைக் குங்கொங்கை யூடணைத்
    தாளித் தழையினுள்ளே
    கழைவளைக் குஞ்சிலை வேளனை
    யாயிதைக் கண்டுகொள்ளே.
    47

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    கண்ணிருக்குந் திருநுதலுங் கனலிருக்குந்

    திருக்கரமுங் கலந்தோர் பேதைப்
    பெண்ணிருக்கு மிடப்பாலும் பிறையிருக்கு
    மவுலியுமாய்ப் பிரிக்க லாகா
    எண்ணிருக்குங் கணத்தொடுமா னந்தவனத்
    திருப்பாரை யெங்கே காண்பார்
    பண்ணிருக்கு மறைகளுமெண் கண்ணனுங்கண்
    ணனுமமரர் பலருந் தானே.
    48

    கட்டளைக் கலித்துறை
    பல்லாண்டு தம்மைப் படைத்தவத்

    தேவரைப் பார்த்துப்பைம்பொன்
    வில்லாண்ட தோள்கொட்டி யெந்தையர்
    கோல விடம்பழுத்த
    அல்லாண்ட கண்டத்தெம் மாதிப்
    பிரானவி முத்தத்திலே
    சில்லாண் டிருந்து சிவமாய்ச்
    செலுஞ்சிறு செந்துக்களே.
    49

    அறுசீர்க் கழிநெடிலடெ ஆசிரியவிருத்தம்
    செந்தே னொழுகும் பொழிற்காசி

    சிறுநுண் ணுசுப்பிற் பெருந்தடங்கட்
    பைந்தே னொழுகு மிடப்பாகர்
    படைவீ டென்ப துணராய்கொல்
    வந்தேன் வளைந்தா யெமைப்பாவி
    மதனா வினையே விளைந்தபோர்
    உய்ந்தே குவதிங் கரிதனற்க
    ணுடையார் மழுவாட் படையாரே.
    50

    மதங்கியார்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    படலைநறுங் கடுக்கைமுடிப் பரஞ்சுடரா

    ரிசைபாடிப் பசுந்தேன் பில்கி
    மடலவிழ்பூம் பொழிற்காசி மணிமறுகில்
    விளையாடு மதங்கி யாரே
    உடலுமெமக் குயிருமொன்றே யோடரிக்கண்
    வாளிரண்டு மொழிய வென்னே
    தொடலைவளைத் தடக்கையின்வா ளிரண்டெடுத்து
    வீசிடநீர் தொடங்கு மாறே.
    51

    ஊசல்
    கலித்தாழிசை
    தொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும்

    கடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி
    விடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக்
    கடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல்
    அம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல்.
    52

    நேரிசை வெண்பா
    பொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத்

    தன்னந்தா தாடு மவிமுத்தர் - இன்னமிர்தா
    முன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே
    இன்னங் கடுக்கை யிவட்கு.
    53

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    குன்றிரண்டு சுமந்தொசியுங் கொடியன்னீ

    ரவிமுத்தங் குடிகொண் டாகம்
    ஒன்றிரண்டு வடிவானார் திரள்புயத்து
    மார்பகத்து முமிழ்தேன் பில்கி
    மின்றிரண்ட தெனப்புரளும் பொலங்கடுக்கைத்
    தாமத்தின் விரைத்தா தாடிப்
    பொன்றிரண்ட தெனவிருக்கும் பொறிவண்டு
    செய்தவமென் புகலு வீரே.
    54

    கொச்சகக் கலிப்பா
    புகுமே மதிக்கொழுந்தும் புன்மாலைப் போதும்

    நகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே
    உகுமே யுயிர்காசி யுத்தமரைக் காணத்
    தகுமேயப் போதிதழித் தாரும் பெறலாமே.
    55
    ஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண்
    போமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ
    தேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர்
    தாமோ தருவீ ருமதுபரந் தாமமே.
    56

    கலிநிலைத்துறை
    பரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார்

    வரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற்
    புரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க்
    கிரந்தா மத்தை யெனப்புக் லீரேந் திழையீரே.
    57

    பாணாற்றுப்படை
    நேரிசை யாசிரியப்பா
    இழுமென் மழலை யின்னமு துறைப்பப்

    பிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின்
    வள்ளுகிர் வடிம்பின் வரன்முறை வருடித்
    தெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண
    வாழிய கேண்மதி மாற்றமொன் றியானும் .......(5)
    ஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே
    பலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம
    சிலபகல் யானுநின் னிலைமைய னாகி
    நலம்பா டறியா விலம்பா டலைப்ப
    நீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும் .......(10)
    சிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்
    மசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும்
    பசையில் யாக்கைத் தசைகறித் துண்ண
    அரும்பசிக் குண்ங்கியும் பெரும்பிணிக் குடைந்தும்
    சாம்பல்கண் டறியா தாம்பி பூத்த .......(15) எலிதுயி லடுப்பிற் றலைமடுத் தொதுங்கிச்
    சிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி
    குடங்கையிற் றாங்கிய கொடிற்றினள் குடங்கைக்
    கடங்கா வுண்க ணாறலைத் தொழுக
    அழுகுரற் செவிசுட விழுமநோய் மிக்குக் .......(20)
    களைகண் காணா தலமரு மேல்வையிற்
    கடவு ணல்லூழ் பிடர்பிடித் துந்தக்
    குரைபுனற் கங்கைக் கரைவழிச் சென்றாங்குத்
    தேம்பழுத் தழிந்த பூம்பொழிற் படப்பையிற்
    கடவுட் கற்பகக் கொடிபடர்ந் தேறி .......(25)
    வான்றொடு கமுகின் மடற்றலை விரிந்து
    நான்றன திசைதொறு நறுநிழற் கதலித்
    தேங்கனி பழுத்த பூங்குலை வளைப்ப
    அம்மலர்க் கொடியிற் செம்முக மந்தி
    முடவுப் பலவின் முட்புறக் கனியைப் .......(30)
    புன்றலைச் சுமந்து சென்றிடுங் காட்சி
    குடமிசைக் கொண்டொரு கூன்மிடை கிழவன்
    நெடுநிலைக் கம்பத்தின் வடமிசை நடந்தென
    இறும்பூது பயக்கு நறும்பணை மருதக்
    கன்னிமதி லுடுத்த காசிமா நகரம் .......(35)
    பெருவளஞ் சுரக்க வரசுவீற் றிருக்கும்
    மழுவல னுயர்த்த வழனிறக் கடவுள்
    பொன்னடி வணங்கி யின்னிசை பாடலும்
    அந்நிலைக் கண்ணே யகல்விசும் பொரீஇச்
    சுரபியுந் தருவும் பெருவளஞ் சுரப்ப .......(40)
    இருமையும் பெற்றனன் யானே நீயுமத்
    திருநகர் வளமை பாடி யிருநிலத்
    திருநிதிக் கிழவனேக் கறுப்பத்
    திருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே.
    58

    வண்டுவிடு தூது
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    சிறைவிரிக்கு மதுகரங்கா டேம்பிழிபூம்

    பொழிற்காசித் திருநா டாளும்
    மறைவிரிக்குஞ் சிலம்படியார் திரள்புயத்துப்
    புரளுநறு மலர்ப்பூங் கொன்றை
    நறைவிரிக்கு மிதழ்க்கரத்தா லூட்டுமது
    விருந்துண்டு நயந்து மற்றென்
    குறைவிரித்தோ ரிருவரிசை கூட்டுண்ணுந்
    திருச்செவிக்கே கூறு வீரே.
    59

    கட்டளைக் கலித்துறை
    கூற்றடிக் கஞ்சிக் குலையுநெஞ் சேயஞ்சல் கோச்செழியன்

    மாற்றடிக் கஞ்சு மிடப்பா கனைமள்ளர் கொன்றகருஞ்
    சேற்றடிக் கஞ்ச மலர்வயற் காசிச் சிவக்கொழுந்தைப்
    போற்றடிக் கஞ்சலி செய்பற்று வேறு புகலில்லையே.
    60

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    இலைமுகங் குழைத்த பைம்பூ

    ணேந்திள முலையோ டாடும்
    மலைமுகங் குழைத்த காசி
    வரதர்கண் டிலர்கொன் மாரன்
    சிலைமுகக் கணைக்கெம் மாவி
    செகுத்துண வருத்தத் திங்கட்
    கலைமுகம் போழ்ந்த காயங்
    களங்கமாய் விளங்கு மாறே.
    61

    கட்டளைக் கலித்துறை
    விளங்கனி யொன்றெறி வெள்விடை

    யோடும் விழிக்கணுழைந்
    துளங்கனி யப்புகுந் தாய்விர
    கானலத் துற்றதென்னாம்
    வளங்கனி பண்ணை வயல்சூ
    ழவிமுத்த வாணநறுங்
    களங்கனி யென்றுமை கைக்கிளி
    பார்க்குங் கறைக்கண்டனே.
    62

    ஆசிரியவிருத்தம்
    கண்ட மட்டு மிருண்டு பாதி

    பசந்து பாதி சிவந்துளார்
    காசி நாதர் கரத்து வைத்த
    கபால மொன்றல தில்லையால்
    உண்டு கோடியின் மேலு மையர்
    பதம்பெ றக்கட வாரவர்க்
    கொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர்
    கபாலம் வேண்டு மதற்கெலாம்
    பண்டி ருந்த விரிஞ்சன் மார்தலை
    மாலை யுஞ்செல வாய்விடிற்
    பார மென்றலை மேல்வ ருங்கொ
    லெனுங்க வற்சியி னாற்பசுங்
    கொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயி
    லார்பி தாமக னாரெனுங்
    கொள்கை கண்டும் விழைந்த வாவவர்
    பதஞ்ச மீரகு மாரனே.
    63

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    கும்ப மிரண்டு சுமந்தொசியுங் கொடிநுண்

    மருங்கு லிறுமுறுமென்
    றம்பொற் பசுங்கொம் பன்னாளை யாகத்
    தணைத்த வகிலேசர்
    செம்பொ னிதழித் தெரியலையே சிந்தித்
    திருப்பத் திரண்முலையும்
    பைம்பொ னுருவும் பீர்பூத்த பவளச்
    செவ்வாய்ப் பசுங்கிளிக்கே.
    64

    கட்டளைக் கலித்துறை
    கிள்ளைக் கமிர்த மொழிசாற்

    றிடுங்கிஞ் சுகவிதழ்ப்பெண்
    பிள்ளைக் கிடந்தந்த காசிப்
    பிரான்பிறை யோடுமுடிக்
    கொள்ளைச் சிறைவண்டு கூட்டுணுங்
    கொன்றையுங் கூடவைத்தார்
    வள்ளக் கலச் முலைக்கங்கை
    யாளுயிர் வாழ்வதற்க்கே.
    65

    கலிவிருத்தம்
    வாட்ட டங்கண் மழைப்புனன் மூழ்கியே

    சேட்டி ளங்கொங்கை செய்தவ மோர்கிலார்
    தோட்டி னங்கொன்றை சூடிப்பொ னம்பலத்
    தாட்டு வந்த வவிமுத்த வாணரே.
    66

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிடியவிருத்தம்
    நரைமு திர்ந்தன கண்கள் பஞ் சார்ந்தன

    நமன்றமர் வழிக்கொண்டார்
    திரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலை
    செயலிது மடநெஞ்சே
    உரைமு திர்ந்தவர் குழாத்தொடு மடைதியா
    லொழுகொளி முடிக்கங்கைக்
    கரைமு திர்ந்திடாக் கலைமதி முடித்தவர்
    காசிநன் னகர்தானே.
    67

    வஞ்சித்துறை
    நகர மாய்மறைச், சிகர மானதால்

    மகர மாயினான், நிகரில் காசியே.
    68

    கட்டளைக்கலித்துறை
    இல்லொன் றெனவே னிதயம்புக்

    காய்மத னெய்கணைகள்
    வல்லொன்று பூண்முலை மார்பகம்
    போழ்வன மற்றென்செய்கேன்
    அல்லொன்று கூந்த லணங்கர
    சோடுமொ ராடகப்பொன்
    வில்லொன்று கொண்டவி முத்தத்தி
    லேநின்ற விண்ணவனே.
    69

    கைக்கிளை
    மருட்பா
    விண்ணமிர்து நஞ்சாம் விடமு மமிர்தமாம்
    உண்ணமிர்த நஞ்சோ டுதவலாற் - றண்ணென்
    கடலொடு பிறந்தன போலுந் தடமலர்க்
    கடிநகர் காசியுண் மேவும்
    மடலவிழ் கோதை மதர்நெடுங் கண்ணே.
    70

    வஞ்சிவிருத்தம்
    கண்ணொ டாவி கருத்துமாய்

    உண்ணி றைந்ததொ ரொண்பொருள்
    அண்ணு மாநக ரானதால்
    அண்ண லாரவி முத்தமே.
    71

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    முத்தாடி மடித்தலத்தோ ரிளஞ்சேயை

    யுலகீன்ற முதல்வி யோடும்
    வைத்தாடு வீர்பொதுவி னின்றாடு
    முமக்கிந்த வார மென்னே
    கொத்தாடு சடையொடுமா னந்தவனத்
    தேகுறுந்தா ணெடும்பூ தத்தோ
    டொத்தாடு வீரடிகட் கெல்லோமும்
    பிள்ளைகளென் றுணர்ந்தி டீரே.
    72

    சம்பிரதம்
    ஆசிரிய விருத்தம்
    உண்டகில கோடியு முமிழ்ந்திடுவன்

    முகிலேழு மொக்கப் பிழிந்துகடலே
    ழுடன்வாய் மடுத்திடுவன் வடமேரு
    மூலத் தொடும்பிடுங் கிச்சுழற்றி
    அண்டபகி ரண்டமு மடித்துடைப்
    பன்புவன மவையேழு பிலமேழுமாய்
    அடைவடை வடுக்கிய வடுக்கைக்
    குலைப்பனிவை யத்தனையும் வித்தையலவால்
    கொண்டன்மணி வண்ணனு முண்டகக்
    கண்ணனும் குஞ்சிதச் செஞ்சரணமும்
    குடிலகோ டீரமுந் தேடியத
    லமுமண்ட கோளமுந் துருவியோடப்
    பண்டைமறை யோலமிட வௌியினட
    மாடும் பரஞ்சுடர் பொலிந்தகாசிப்
    பதியிலடை யாமலிப் பல்லுயிர்த்
    தொகுதியும் பரமபத மடைவிப்பனே.
    73

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    விரைகுழைக்கு மழைமுகில்காள் விண்டலர்தண்

    டுழாய்ப்படலை விடலை யென்ன
    அரைகுழைக்கும் பொழிற்காசி யணிநகருக்
    கேகுதிரே லறன்மென் கூந்தல்
    வரைகுழைக்கு முலைகுழைப்பக் குழைதிரடோ
    ளழகுமுடி வணங்கி யென்னக்
    கரைகுழைக்கு மலைகுழைத்த கண்ணுதற்கென்
    பேதைதிறங் கழறு வீரே.
    74

    கட்டளைக் கலித்துறை
    கழைக்கரும் பைக்குழைத் தான்மத

    வேளக் கணத்திலம்பொற்
    குழைக்கரும் புங்குழைந் திட்டதந்
    தோகுளிர் தூங்குதுளி
    மழைக்கரும் பும்பொழிற் காசிப்
    பிரான்மலை யாண்முலைபோழ்
    முழைக்கரும் புற்றர வாடநின்
    றாடிய முக்கணனே.
    75
    கண்ணஞ் சனத்தைக் கரைத்தோடு
    நீர்கடல் செயநின்றாள்
    உண்ணஞ் சனத்துக்கு மஞ்சவைத்
    தாரும்ப ரோட்டெடுப்பப்
    பண்ணஞ்ச நச்சமிர் தாக்கொண்ட
    காசிப் பரமர்ப்பச்சைப்
    பெண்ணஞ்ச நச்சர வார்த்துநின்
    றாடுமப் பிஞ்ஞகரே.
    76

    கட்டளைக் கலிப்பா
    கருகு கங்குற் கரும்பக டூர்ந்துவெண்

    கலைம திக்கொலைக் கூற்றங் கவர்ந்துயிர்
    பருகு தற்குக் கரத்தால் விரிநிலாப்
    பாசம் வீசி வளைத்ததிங் கென்செய்வேன்
    முருகு நாறு குழற்பொலங் கொம்பனீர்
    முத்தர் வாழவி மூத்தமு நெக்குடைந்
    துருகு பத்தர்தஞ் சித்தமுங் கோயிலா
    வுடைய தாதற் குரைத்திடு வீர்களே.
    77

    ஊர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    உரைத்த நான்மறைச் சிரத்துமைந் தவித்தவ

    ருளத்தும்வண் டொருகோடி
    நிரைத்த பூங்குழ னிரைவளை யவளொடு
    நின்றவ ருறைகோயில்
    குரைத்த தெண்டிரைக் கங்கைமங் கையர்துணைக்
    கொங்கைமான் மதச்சேற்றைக்
    கரைத்தி ருங்கடல் கருங்கட லாச்செயுங்
    காசிமா நகர்தானே.
    78

    கட்டளைக் கலிப்பா
    மான மொன்று நிறையொன்று நாணொன்று

    மதிய மொன்று குயிலொன்று தீங்குழற்
    கான மொன்று கவர்ந்துணு மாமதன்
    கணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம்
    வான மொன்று வடிவண்ட கோளமே
    மவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும்
    நான மொன்று புயமுச் சுடருமே
    நயன மாப்பொலி யும்மகி லேசனே.
    79

    நேரிசை வெண்பா
    அகிலாண்ட மாயகண்ட மானவகி லேசா

    முகிலாண்ட சோலையவி முத்தா - நகிலாண்ட
    சின்னவிடைப் பாகா திருநயனஞ் செங்கமலம்
    அன்னவிடைப் பாகா வருள்.
    80

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    அருகுமதன் குழைத்தகழை தெறித்தமுத்தே

    றுண்டெழுவண் டரற்று மோசை
    பெருகுசிறு நாணொலியென் றறிவழிந்து
    பேதுறுமிப் பேதைக் கென்னாம்
    உருகுபசும் பொன்னசும்பு தசும்புவிசும்
    பிரவியென வுடைந்து கஞ்சம்
    முருகுயிர்க்கும் பொலங்குடுமி விமானத்திற்
    பொலிந்தவவி முத்த னாரே.
    81

    கட்டளைக்கலித்துறை
    முத்திக்கு வேட்டவர் மோட்டுடற் பார முடைத்தலையோ
    டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பின ராலிவை யன்றியப்பாற்
    சித்திப் பதுமற் றிலைபோலுங் காசிச் சிவபெருமான்
    பத்திக்குக் கேவல மேபல மாகப் பலித்ததுவே.
    82

    கலிநிலைத்துறை
    பல்வே றுருவாய் நின்றருள் காசிப் பதியுள்ளீர்
    வில்வே றில்லை பூவல தம்பும் வேறில்லை
    அல்வே றல்லாப் பல்குழ லாரை யலைக்கின்றான்
    சொல்வே றென்னே பாரு மனங்கன் றொழிறானே.
    83

    கட்டளைக் கலித்துறை
    தானென் றவர்மு னொளித்தோடித்
    தன்னை யிழந்தவர்முன்
    யானென்று சென்றிடுங் காசிப்
    பிரானுடம் பென்பதென்போ
    டூனென்று விட்டொழிந் தார்களிப்
    பாருவட் டாதவின்பத்
    தேனென் றடைந்தவர்க் குண்ணக்
    கிடைப்பது தீவிடமே.
    84

    கட்டளைக் கலிப்பா
    தீவி டங்கொடுத் தேயமு துண்டவத்
    தேவ ருக்கொளித் துத்திரி கின்றநீர்
    பாவி டும்மலர்ப் பஞ்சணை மேலிவள்
    பவள வாயமிர் துண்டாற் பழுதுண்டோ
    நாவி டங்கொண் டொருவன் முகங்களோர்
    நான்கி னுந்நடிக் குந்துர கத்தைவிட்
    டாவி டங்கொண் டருட்காசி வீதிக்கே
    யாடல் செய்திடு மானந்தக் கூத்தரே.
    85

    நேரிசை வெண்பா
    ஆனந்த வல்லியுட னானந்தக் கானகத்தே
    ஆனந்தக் கூத்தா டருட்கடலை - ஆனந்தம்
    கொள்ளத் திளைத்தாடுங் கூடாதே லிப்பிறவி
    வெள்ளத் திளைத்தாடு வீர்.
    86

    கலிவிருத்தம்
    வீர மென்பது வின்மதற் கேகுணம்
    கோர மென்பது கொண்டிருந் தாவதென்
    ஈர மென்ப திலையிவர்க் கென்றதால்
    வார மென்பதி வாழவி முத்தரே.
    87

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    முத்து நிரைத்த குறுநகையீர் முளரிக்
    கணையான் கணைகடிகைப்
    பத்து நிரைத்தா னினித்தொடுக்கிற் பாவைக்
    கொருதிக் கிலைபோலும்
    ஒத்து நிரைத்த வுடுநிறையோ டொன்றோ
    பலவோ வெனவரும்பூங்
    கொத்து நிரைத்த பொழிற்காசிக் குழகற்
    கொருவர் கூறீரே.
    88

    கட்டளைக் கலித்துறை
    கூற்றடிக் கஞ்சி முறையோ
    வெனக்குல நான்மறையும்
    போற்றடிக் கஞ்சம் புகலடைந்
    தேமுனைப் போலவைத்தாற்
    சேற்றடிக் கஞ்ச வயற்காசி
    நாத செருப்படிக்கும்
    மாற்றடிக் குந்தொண்டர் வில்லடிக்
    கும்புகன் மற்றில்லையே.
    89

    கட்டளைக் கலிப்பா
    இல்லை யென்ப திலையோர் மருங்கிலே
    யெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே
    கொல்லு கின்ற தெழுதருங் கூற்றமே
    கூறு மாற்ற மெழுதருங் கூற்றமே
    வில்லு மேற்றிடு நாணும்பொன் னாகமே
    விடுக ணைக்குண்டு நாணும்பொன் னாகமே
    மல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே
    வாச மையர்க் கவிமுத்த மென்பதே.
    90

    கலிவிருத்தம்
    என்ப ணிக்கும் பணியென் றிரந்தபோ
    தென்ப ணிக்கும் பணிதிக்கு மேக்கென்றார்
    என்ப ணிக்கும் பணியா விருந்ததோர்
    என்ப ணிக்குமுன் பாமகி லேசர்க்கே.
    91

    நேரிசை வெண்பா
    கேயூர மூரக் கிளர்தோ ளகிலேசர்
    மாயூர மூருமொரு மைந்தற்குத் - தீயூரும்
    அவ்வேலை யீந்தா ரடித்தொழும்பு செய்தொழுகும்
    இவ்வேலை யீந்தா ரெமக்கு.
    92

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    குருகை விடுத்தா ளெனக்குருகே

    கூறாய் சுகத்தை விடுத்தாளென்
    றருகு வளருஞ் சுகமேசென்
    றறையாய் நிறைநீர் தெரிந்துபால்
    பருகு மனமே யனம்விடுத்த
    படிசென்று றுரையாய் படிவருளத்
    துருகு பசும்பொன் மதிற்காசி
    யுடையார் வரித்தோ லுடையார்க்கே.
    93
    உடுத்த கலையு மேகலையு
    மொழுகும் பணியும் விரும்பணியும்
    தொடுத்த வளையுங் கைவளையுந்
    துறந்தா ளாவி துறந்தாலும்
    அடுத்த துமது பரந்தாம
    மதனா லிதழிப் பரந்தாமம்
    விடுத்து விடுவா ளலளெனப்போய்
    விளம்பீர் காசி வேதியர்க்கே.
    94

    நேரிசை வெண்பா
    வேதத் துரகர் விரக ரகிலேசர்
    பாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர்
    சேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார்
    கோவடிக்கண் டாரே குலைந்து.
    95

    கட்டளைக் கலித்துறை
    குலைவளைக் கும்பழுக் காய்முழுத்
    தாறு கொழுங்கமுகின்
    தலைவளைக் கும்பொழிற் காசிப்
    பிரான்றடங் கோட்டுப்பைம்பொன்
    மலைவளைக் கும்புயத் தாண்மையென்
    னாந்தெவ் வளைந்துகழைச்
    சிலைவளைத் துத்தன் படைவீ
    டமர்க்களஞ் செய்திடினே.
    96

    ஆசிரியவிருத்தம்
    இடம ருங்கினின் மருங்கி லாதவவள்
    குடியி ருக்கவு முடியில்வே
    றிவளொ ருத்தியை யிருத்தி வைத்துமதி
    மோக மோகினியி னுருவமாய்
    நடமி டுங்கிவடன் மேலும் வைத்துள
    நயந்தொர் பிள்ளை பயந்தநீர்
    நங்கு லத்திருவை மருவி னின்றுபிறர்
    நாவ ளைக்கவிட மாகுமோ
    குடமு டைந்ததெ னவானி னங்கண்மடி
    மடைதி றந்துபொழி பாலொடும்
    கொழும டற்பொதி யவிழ்ந்து கைதைசொரி
    சோறு மிட்டணி திரைக்கையாற்
    கடல் வயிற்றினை நிரப்பு கின்றசுர
    கங்கை குண்டகழி யாநெடுங்
    ககன நீள்குடுமி மதில்க ளேழுடைய
    காசி மேவுமகி லேசரே.
    97

    மடக்கு
    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    சரியோ டொழுகுங் கரவளையே சரக்கோ டொழுகுங் கரவளையே
    தையற் கனமே தீவிடமே தவழுங் கனமே தீவிடமே
    சொரிவ தடங்காக் கண்ணீரே துளிக்குந் தடங்காக் கண்ணீரே
    துயரே வதித னந்தினமே சூரற் கழுத்தி னந்தினமே
    கருகிப் புலர்ந்த நாவாயே கரைவந் திழியு நாவாயே
    கண்க ளுறங்கா கழுநீரே கடலே கழியே கழுநீரே
    அரிவை யிவளுக் குருகீரே யனத்தோ டுறங்குங் குருகீரே
    அளியா ரிதழி வனத்தாரே யருளானந்த வனத்தாரே.
    98

    சந்த விருத்தம்
    வனத்தினுமொர் பொற்பொதுமு கப்பினு நினைப்பவர்
    மனத்தினுந டித்த ருள்செய்வார்
    சினக்கயல் விழிக்கடை கருக்கொள்கரு ணைக்கொடி
    திளைத்தமரு மத்த ரிடமாம்
    நனைக்கமல நெக்குடை தரக்குடை துறைச்சுர
    நதிக்கரையின் முட்டை கொலெனாக்
    கனத்தபரு முத்தினை யணைத்தன மினத்தொடு
    களிக்குமவி முத்த நகரே.
    99

    வேறு
    கருமுகில் வெளுப்பவற விருளுமள கத்தினிவள்
    கதிர்முலை முகட்டணைய வணைமீதே
    வருகில ரெனிற்செவியி லொருமொழி சொலச்சமயம்
    வருகென வழைக்கினுடன் வருவார்காண்
    சுரநதி சுருட்டும்விரி திரைகளொரு முத்திமக
    டுணைமுலை திளைக்குமவர் மணநாளின்
    முரசொடு முழக்குகுட முழவென விரைக்கவளை
    முரலுமவி முத்தநக ருடையாரே.
    100

    நேரிசை யாசிரியப்பா
    உடைதிரைக் கங்கை நெடுநதித் துறையின்
    வலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள்
    வெள்ளிவீ ழன்ன விரிநிலாப் பரப்பும்
    பொன்வீ ழன்ன புரிசடைக் கடவுள்
    முடவுப் படத்த கடவுட் பைம்பூண் .......(5)
    கறங்கெனச் சுழலுங் கால்விசைக் காற்றா
    துமிழ்தரு குருதித் திரடெறித் தாங்குத்
    திசைதொறுந் தெறித்த திரண்மணிக் குலங்கள்
    வானேறு கடுப்ப வெரிநிற் றாக்கலும்
    கையெடுத் தெண்டிசைக் களிறும் வீரிடத் .......(10)
    தெய்வநா டகஞ்செய் வைதிகக் கூத்தன்
    வரைபகப் பாயும் வானரக் குழாத்தொரு
    கருமுக மந்தி கால்விசைத் தெழுந்து
    பழுக்காய்க் கமுகின் விழுக்குலை பறித்துப்
    படர்தரு தோற்றஞ் சுடரோன் செம்மல் .......(15)
    தெசமுகத் தொருவன் றிரண்முடி பிடுங்கி
    விசையிற் பாய்ந்தென் விம்மிதம் விளைக்கும்
    தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்
    கடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்
    வேம்புங் கடுவுந் தேம்பிழி யாகச் .......(20)
    செஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி
    அஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்
    வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்
    தேத்தமிழ் தௌிக்குஞ் செந்நாப் புலவீர்
    மண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப் .......(25)
    புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து
    முடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்
    செந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்
    பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை
    நாத்தழும் பிருக்க வேத்துமி னீரே. .......(30)
    101

    காசிக் கலம்பகம் முற்றிற்று

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design