திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Friday, October 29, 2010

சித்தர் பாடல்கள் தொகுப்பு பட்டினத்துப் பிள்ளையார்

சித்தர் பாடல்கள் தொகுப்பு
பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது

    1. திருவேகம்பமாலை 2. திருத்தில்லை 3. முதலாவது கோயிற்றிருவகவல் 4. இரண்டாவது கோயிற்றிருவகவல் 5. மூன்றாவது கோயிற்றிருவகவல் 6. நான்காவது கச்சித் திருஅகவல் 7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு 8. அருட்புலம்பல் - மகடூஉ முதலாக உள்ளது

1. திருவேகம்பமாலை
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3

நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15

பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16

பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18

ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19

அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21

ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23

நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24

கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25

வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30

பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31

நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32

சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35

விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37

பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42

திருவேகம்பவிருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

2. திருத்தில்லை
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1

சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2

அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3

ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4

பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7

காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8

ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9

ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10

ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11

அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12

தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13

உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14

வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16

தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17

நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18

ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19

அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20

3. முதலாவது கோயிற்றிருவகவல்
(திருமண்டில ஆசிரப்பா)
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!

4. இரண்டாவது கோயிற்றிருவகவல்
காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10

நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15

மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20

ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30

அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35

இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38

5. மூன்றாவது கோயிற்றிருவகவல்
பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5

இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10

ஆணவ மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45

அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50

எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!

6. நான்காவது கச்சித் திருவகவல்

திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70
- - - - - - - - - - - - - - -- - - - -
திருச்செங்கோடு

நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2
- - - - - - - - - - - - - - - - -
திருவிடைமருதூர்

காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2
- - - - - - - - - - - - -- - - - - - - -
திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
- - - - - -- - - - - - - - - - - - - -
திருக்காளத்தி

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1

பொன்னாற்

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
(ஆசிரியர் : சிவவாக்கியர்) 
 
காப்பு
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
0
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
1
அக்ஷர நிலை

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
2
சரியை விலக்கல்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
3
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
4
தேகநிலை

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
[நந்துதல் - இச்சை கொள்ளுதல்; நடுவன் - எமன்]
5
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
6
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
7
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
8
அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
9
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
10
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
11
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
12
யோக நிலை

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
13
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
14
வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
15
அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
16
அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
17
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
18
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
19
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
20
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
21
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
22
ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
23
கிரியை நிலை

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
24
உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
25
அறிவு நிலை

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?
26
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
27
தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
28
தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!
29
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
30
பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.
31
குசுகுசுப்பை - சுருக்குப்பை
தரிசனம்

செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
32
அறிவு நிலை

மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
33
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
34
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
35
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
36
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
37
கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
38
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
39
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
40
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
41
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
42
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.
43
சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.
44
ஒடுக்க நிலை

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
45
கிரியை

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?
46
அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
47
அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
48
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
49
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
50
கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.
51
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
52
இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?
53
நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
54
தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
55
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.
56
உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.
57
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
58
அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
59
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
60
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
61
மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.
62
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!
63
தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!
64
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
65
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!
66
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
67
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
68
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
69
இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.
70
அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?
விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
71
சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.
72
உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
73
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!
74
அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?
75
அன்பு நிலை

இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;
உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!
76
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
77
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.
78
அறிவு நிலை

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
79
மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?
80
விறகு - கர்வம்

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.
81
மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!
82
பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே,
நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே.
83
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
84
பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
85
சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பல
 

Saturday, October 16, 2010

சிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளியது


திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் 
 
 சிறப்புப் பாயிரம்



நேரிசை ஆசிரியப்பா


மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.

நூல்
மங்கல வாழ்த்து
கல்லால் நிழன்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புணைவரே

அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார்--- தம்மை
உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்

பொதுவதிகாரம்:பிரமாணவியல்
1. பொதுவதிகாரம்
1.பிரமாணவியல்
முதல் சூத்திரம்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல்
நுதலிற்று.

உரைவகை: இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.
1. முதல் அதிகரணம்
மேற்கோள்:
ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது.

ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்
உதாரணம்:
பூதாதி ஈறும் முதலும் துணையாக
பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின்- ஓதாரோ
ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1

2. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது
ஏது: இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின்.
உதாரணம்.
இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால்
இலயித்தவாறு உளதா வேண்டும்_ இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது
அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2

வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால்- வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக்
கூட்டானே மண்போல் குளிர்ந்து 3

நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் -- ஆக்காதே
கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று இன்றாம் கட்டு 4

3. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, சங்காரமே முதல் என்றது.
ஏது: சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்.

உதாரணம்:
ஒன்று அலா ஒன்றில் உளது ஆகி நின்றவாறு
ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் _-- ஒன்றலா
ஈறே முதல் அதனின் ஈறு அலா ஒன்று பல
வாறே தொழும்பு ஆகும் அங்கு 5

இரண்டாம் சூத்திரம்
அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
4. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது.
ஏது: அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய
நாத்தியை உணர்த்துமாயிட்டு.

உதாரணம்.
கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம்
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி
அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. 6

ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைக் காண்--- ஒன்று இன்றால்
அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்
இக்கிரமத்து என்னும் இருக்கு. 7

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு 8

அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல்
உருக்கி உடங்கு இயைந்து நின்று--- பிரிப்பு இன்றித்
தாமே உலகாம் தமியேன் உளம் புகுதல்
யானே உலகு என்பன்இன்று 9

5. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது
ஏது: ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான்
உதாரணம்:
உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே--- வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல்
செய்வன், செயல் அணையா சென்று. 10

அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாம் சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம் போல்- அவ்வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தான் அறிந்து அணைப்பார் ஆங்கு. 11

நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும்
சொல்லில் புதிதன்று தொன்மையே -- வல்லி
மலகன்மம் அன்று உளவாம் வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய் கமலத்து ஆம். 12

6. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்:இனி, இவ்வான்மாக்கள் மாறி பிறந்து வரும் என்றது.
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.
உதாரணம்:
கண்ட நனவைக் கனவு உணர்வில் தான் மறந்து
விண்படர்ந்து அத்தூடு வினையினால் -- கண்செவிகெட்டு
உள்ளதேத் தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனம்
தள்ள விழும் கருவில் தான். 13

அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் வேறு
பரகாயம் போய்வரும் அப்பண்பும் -- பரவில்
குடாகாய ஆகாயக் கூத்தாட்டம் என்பது
அடாது உள்ளம் போமாறு அது 14

7. நாங்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி, நீக்கமின்றி நிற்குமன்றே என்றது
ஏது:அவன் ஏகன் அநேகன் இரண்டும் இன்றிச் சருவவியாபியாய் நிற்றலான்.
உதாரணம்:
எங்குமுளன் என்ற அளவை ஒன்று அன்று இரண்டென்னில்
எங்கும் உளன் அன்று, எவற்று எவனும்--- அங்கண்
அவை அவன் அன்றில்லை பொன்னொளிப்பொல் ஈசன்
அவையுடமை ஆளாம் நாம் அங்கு. 15

மூன்றாம் சூத்திரம்.
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.
8. முதல் அதிகரணம்.
மேற்கோளும் ஏதுவும்: ஈண்டு , இலது என்றலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ் வான்மாவாம்
என்றது.

உதாரணம்:
அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
நின்றஒன்று உளதுஅதுவே நீ அனைத்தும்-- நின்றுஇன்று
தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
தற்பரமும் அல்லை தனி. 16

9. இரண்டாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது
பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ் வான்மாவாம் என்றது.
உதாரணம்:
எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது
உனதலாது உன்கைகால் யாக்கை -- எனதென்றும்
என்னறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண்
உன்னில் அவை வேறாம் உணர். 17

10. மூன்றாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது
பொழிப்புரை: ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்து ஒன்று அறியாமையின் இவ்
ஐந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ் ஆன்மாவாம் என்றது.

உதாரணம்:
ஒன்று அறிந்தது ஒன்று அறியா தாகி உடல்மன்னி
அன்றும் புலனாய அவ் அஞ்செழுத்தை-- ஒன்று அறிதல்
உள்ளதே ஆகில் அதுநீ தனித்தனி கண்டு
உள்ளல் அவை ஒன்றல்ல ஓர். 18

11. நான்காம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
உதாரணம்:
அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச்
செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி-- அவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
மாறல், உடல் நீ அல்லை மற்று 19

12. ஐந்தாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனிக் கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியா
நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

உதாரணம்:
கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே
உண்டிவினை இன்றி உயிர்த்தலால்-- கண்டறியும்
உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில்
உள்ளதாம் உண்டிவினை ஊன். 20

13. ஆறாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம்
என்றது.

உதாரணம்.
அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது
அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி-- அறிந்தது
எது? அறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்
அதுஅதுதான் என்னும் அகம். 21

14. ஏழாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான்.
உதாரணம்:
கலைஆதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம், தீபமே போல--- அலையாமல்
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம்
தானத்தின் வேறாகும் தான். 22

-------
பொதுவதிகாரம்: இலக்கணவியல்

நான்காம் சூத்திரம்
அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.
15: முதல் அதிகரணம்.
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்.
மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள்
மனம் ஆதி மன்புலனின் அல்லன்-- மனமேல்
உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில்
உதிக்கும் கடல்திரையை ஒத்து 23

சிந்தித்து ஆய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம்
புந்தியாய் ஆய்ந்து மனமாகிப்-- பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு 24

அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
மகாரம் மனம் சித்தம் விந்து--- பகாது இவற்றை
நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்
போதம் கடற்றிரையே போன்று 25

எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்து-- கண்ணில்
பகர் அயன்மா லொடு பரமன் அதிதெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம் 26

16: இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.
ஏது: அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான்
உதாரணம்:
மாய தனுவிளக்காம் மற்று உள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய்--- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னை மலம் அன்றணைதல் தான் 27

17: மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மா, சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்ச அவத்திதனாய் நிற்கும் என்றது.
ஏது: அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.
உதாரணம்:
ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில்
சென்றணையும் சித்தம் இதயத்து-- மன்ற ஏய்
ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு

இலாடத்தே சக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும்-- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு

ஐந்தாம் சூத்திரம்
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.
18. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்--ஐம்பொறியில்
காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல்
காணாகண் கேளா செவி 30

19. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது.
ஏது: அவ் ஆன்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான்.
உதாரணம்:
மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது
என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன்
கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண்
எண்ணான் சிவன் அசத்தை இன்று 31

வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல--- மெய்யவனில்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக்
கண்டு உடனாய் மன்னுதலைக் காண் 32

அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே
அருளும் அவன் அன்றி இல்லை-- அருளின்று
அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு
இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து 33

ஆறாம் சூத்திரம்
உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று
20. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்
உதாரணம்:
அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம்
அசத்தாகும் மெய்கண்டான் ஆயின்-- அசத்துஅலாய்!
நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும்
ஓரில் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு 34

21. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவன் என்றது
ஏது: பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசம் இன்மையானும்.
உதாரணம்:
எண்ணிய சத்தன்று அசத்தன்று ஆம் என்றால் என்
கண்ணி உளது என்றல், மெய்கண்டான்- எண்ணி
அறிய இரண்டு ஆம் அசத்து ஆதல் சத்தாம்
அறிவு அறியா மெய்சிவந்தாள் ஆம் 35

உணர்ப அசத்தாதல் ஒன்று உணராது ஒன்றை
உணருநீ தான் உணராய் ஆயின் --- உணரும் உனில்
தான் இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால்
தான் இரண்டாய்க் காணான் தமி 36

பாவகமேல் தான் அசத்தாம், பாவனா அதீதம் எனில்
பாவகமாம் அன்றென்னில் பாழ் அதுவாம்-- பாவகத்தைப்
பாவித்தல் தான் என்னில் பாவகமாம் தன்னருளால்
பாவிப்பது பரம் இல் பாழ் 37

அறிய இரண்டு அல்லன், ஆங்கு அறிவு தன்னால்
அறியப் படான், அறிவின் உள்ளான் -- அறிவுக்குக்
காட்டு ஆகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக்
காட்டாது அறிவு அறிந்து கண்டு 38

அதுவெனும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே
அதுவென்று அறி அறிவும் உண்டே--- அதுவென்று
அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவுள் நிற்றல்
அறியும் அறிவே சிவம் ஆம் 39

--------
உண்மை அதிகாரம்: சாதனாவியல்

ஏழாம் சூத்திரம்
யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு:
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று
22. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.
ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்
அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல்---- அன்னியமாக்
காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல்
மாணா அசத்து இன்மை மற்று 40

23. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது
ஏது: அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான்
உதாரணம்:
பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த
பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் --- வாய்த்து அதனைக்
கண்டுணர்வார் இல்வழியின் காணும் அசத்தின்மை
கண்டுணர்வார் இல்லது எனக் காண் 41

24. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இருதிறன் அறிவு உளது இரண்டலா ஆன்மா என்றது.
ஏது: இவ்விரண்டனையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலும் உளதாயுள்ள அதுவே அவ்
ஆன்மாவாம் என்றது

உதாரணம்:
அரு உருவம் தான் அறிதல் ஆய் இழையாய் ஆன்மா
அரு உருவம் அன்று ஆகும் உண்மை-- அரு உருவாய்த்
தோன்றி உடன் நில்லாது தோன்றாது நில்லாது
தோன்றல் மலர்மணம்போல் தொக்கு 42

மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும்
பெயர்த்து உணர் நீ சத்து ஆகாய் பேசில்-- அசத்தும் அலை
நீ அறிந்து செய்வினைகள் நீ அன்றி வேறு அசத்துத்
தான் அறிந்து துய்யாமை தான் 43

மெய்ஞானந் தன்னில் விளையாது அசத்தாதல்
அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண்--- மெய்ஞ்ஞானம்
தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல்
தானே உளம் உளவாய்த் தான் 44

எட்டாம் சூத்திரம்
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று
25: முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது
ஏது: மேற் சரியை கிரியா யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான்.
உதாரணம்:
தவம்செய்வார் என்றும் தவலோகம் சார்ந்து
பவஞ் செய்து பற்று அறுப்பார் ஆகத் -- தவஞ் செய்த
நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு 45

பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம் -- இசைத்த
இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான்
மருவுவன் ஆம் ஞானத்தை வந்து 46

26. இரண்டாம் அதிகரணம்.
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்களுக்கு தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது.
ஏது: அவன் அன்னியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்.
உதாரணம்:
மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் -- மெய்ஞ்ஞானம்
பின்னுணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு
முன்னுணர்த்தும் தான் குருவாய் முன் 47

அறிவிக்க அன்றி அறியா உளங்கள்
செறியுமாம் முன்பின் குறைகள் --- நெறியில்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்
குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு 48

இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் -- இல்லா
அருவாகி நின்றானை ஆரறிவார் தானே
உருவாகித் தோன்றானேல் உற்று 49

27: மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது.
ஏது: அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்.
உதாரணம்:
பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்
தன்னிறமே காட்டும் தகைநினைந்து-- பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான்
மெய்பொருட்குத் தைவமாம் வேறு 50

28: நான்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது.
ஏது: ஊசல் கயிறு அற்றால் தாய்தரையேயாம் துணையால்.
உதாரணம்:
சிறைசெய் நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து -- சிறைவிட்டு
அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது
உலைவுஇல் அரன் பாதத்தை உற்று 51

எவ்வுருவும் தானென்னில் எய்துவார் இல்லைதாள்
இவ்வுருவின் வேறேல் இறைஅல்லன் -- எவ்வுருவும்
கண்போல் அவயவங்கள் காணாஅக் கண் இல்லார்
கண்பேறே காண் அக் கழல் 52

ஐம்பொறியின் அல்லை எனும் அந்த தர சிவனை
ஐம்பொறியை விட்டு அங்கு அணைசகலன் -- ஐம்பொறியின்
நீங்கான்நீர்ப் பாசிபோல் நீங்குமல கன்மம்வரின்
நீங்கானை நீங்கும் நினைந்து. 53

ஒன்பதாம் சூத்திரம்
ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
29. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அம்முதலை ஞானக் கண்ணினாலேயே காண்க என்றது.
ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான்.
உதாரணம்:
நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன்
தன்னாலே தனையும் கண்டு தமைக்காணார்
என்னாம் என அறிவார் இன்று 54

காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண் காணா -- காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான் உள்ளத்திற் காண் 55

30. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற்பாற்று
ஏது: இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்றது வேற்றியல்பாகிய
வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான்

உதாரணம்:
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவுஇறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து 56

சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண் --- சுட்டி
உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம்
புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் 57

கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் -- பண்டு அணைந்த
ஊனத்தை தான்விடுமாறு உத்தமனின் ஒண்கருட
சானத்தின் தீர்விடம்போல் தான் 58

31. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்விடத்து சிறீ£ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது.
ஏது: இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின்
அது நீக்குதற்கு எனக் கொள்க.

உதாரணம்:
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் -- அஞ்செழுத்தால்
குண்டலினியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு 59

இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டுஆங்குச்
சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே
காட்டாக்கின் தோன்றி கனல்சேர் இரும்பென்ன
வாட்டானாம் ஓது அஞ்செழுத்து 60

மண்முதல் நாளம் அலர் வித்தை கலாரூபம்
எண்ணிய ஈசர் சதாசிவமாம் -- நண்ணில்
கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம்
நிலைஅதில் ஆம் அச்சிவன்தாள், நேர். 61
----
உண்மை அதிகாரம்: பயனியல்

பத்தாம் சூத்திரம்
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பஒழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், பாசŒயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
32: முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்க என்றது.
ஏது: அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்.
உதாரணம்:
நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல்
தான் என ஒன்று இன்றியே தானதுவாய் --- நான் எனவொன்று
இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடிவைத்து
இல்லென்று தான் ஆம் இறை 62

33. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இறைபணி வழுவாது நிற்க என்றது.
ஏது: அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான்.
உதாரணம்:
நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி
நாம் அல்ல நாமும் அரனுடைமை -- ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை
முற்செய்வினையும் தருவான் முன் 63

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்ச் -- சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு 64

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன்செய் வினை மாயை மூண்டிடினும் -- பின்செய்வினை
மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே
ஆய அதனால் உணரும் அச்சு 65

நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும்
பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் -- எண்ணி
அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும்
அவர்திறல் நீங்கார் அதற்கு 66

சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதமிக்கு
எரிகதிரின் முன்னிருள்போல், ஏலா அசத்தின்
அருகு அணையார், சத்து அணைவார் ஆங்கு 67

பதினொன்றாம் சூத்திரம்
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று
34. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது
ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது
ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும்
ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும்
ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து 68

ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினால் - ஏகமாய்
உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை
உள்ளத்தாற் காணானோ உற்று 69

35. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனிப் பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது.
ஏது: அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்.
உதாரணம்:
அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு
இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் --- அருட்கண்ணால்
பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல்
நேசத்தின் தன்னுணுர்ந்தார் நேர். 70

மன்னும் இருளை மதிதுரந்த வாறு அன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து -- தன்னின்
வலித்து இரும்பைக் காந்தம் வசஞ்செய்வான் செய்தல்
சலிப்பில் விகாரி அலன் தான் 71

நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -- நசித்துமலம்
அப்பு அணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்
கப்பு இன்றாம் ஈசன் கழல் 72

பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப்போய் அகலத்
தன்வாளே எங்குமாம் தன்மைபோல் -- முன்வாள்
மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும்
மலத்து இரித்துச் செல்லும் வரத்து 73

பன்னிரண்டாம் சூத்திரம்
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே

என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
36. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களைக் களைக என்றது.
ஏது: அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான்.
உதாரணம்:
புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும்
மண்முதல் மாயைகாண் மாயையும் -- கண்ணிய
அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்றும்
மெய்ஞ்ஞானிக் காகா விடு. 74

37. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது.
ஏது: அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவார் ஆகலான்.
உதாரணம்:
மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
சிறப்பிலார் தம்திறத்துச் சேர்வை -- அறப்பித்துப்
பத்தர் இனத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும்
மெய்த்தவரை மேவா வினை 75

38. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது.
ஏது: அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
தன்உணர வேண்டித் தனது உருவைத் தான்கொடுத்து
தன் உணரத் தன்னுள் இருத்தலால் -- தன் உணரும்
நேசத்தர் தம்பால் நிகழும் ததிநெய்போல்
பாசத்தார்க்கு இன்றாம் பதி 76

கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கிவேறு
உண்டல்போல் நின்று அங்கு உளதாமால் -- கண்ட உருத்
தான் அதுவாய் அன்று ஆனான் தான் அதுவாய்த் தோன்றானோ
தான் அதுவாய்க் காணும் தவர்க்கு 77

39. நான்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி இவ்விடங்களில் வழிபடுக என்றது.
ஏது: நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும் ஆகலான்.
உதாரணம்:
அது இது என்றது அதுஅல்லான் கண்டார்க்கு
அது இது என்றதையும் அல்லான் -- பொது அதனில்
அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு 78

வினையால் அசத்து விளைதலால் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா -- வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பின் தொழு. 79

தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையல் அது -- முன்னவனே
தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே
மானே தொழுகை வலி 80

நூற்கு அதிகாரிகள்
சிவமென்றும் அந்ததர சிந்தைநேர் நோக்கப்
பவமின்றாம் கண் வாசகத்தின் -- சிவன் உண்டாம்
ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு இங்கு ஒண்குருவால்
இன்று இந்நூல் மும்மை மலர்க்கு

சிறப்புப்பாயிரம்
எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழ இயல்பாய்
நந்தி உரைத்து அருளும் ஞானநூல் -- சிந்தை செய்து
தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாம் உணர
ஏதுதிருட் டாந்தத்தால் இன்று.

சிவஞானபோதம் முற்றும்
---------------
---------------------------

சிவஞானபோத சூர்ணிக்கொத்து
----------
அன்பர்களே,

மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தை அருளிய காலந்தொடங்கி, தமிழ தத்துவச் சிந்தனை அதன் அடிப்படையிலேயே
வளர்ந்துள்ளது. பண்டைய சிவஞானிகள் அதனை ஆழக்கற்று ஏனையோரும் புரிந்து கொள்ளும் வகையில் , ஒவ்வொரு
சூத்திரத்தின் உட்பொருளை சூரணித்து எளிய முறையில் விளக்கிச் செல்ல அதுவே சூர்ணிக்கொத்து என்று பெயர்பெற்று
மூலநூலொடு உடன் வைத்து படிக்கப்படுவதும் ஆயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டு நல்லசாமிப் பிள்ளை, வசனலங்காரதீபம்
எழுதிய ஈழத்து செந்திநாதையர், தெளிவுரை எழுதிய கிருபானந்த வாரியார் ஆகியோருக்கும் இன்னும் பலருக்கும் மிகவும்
பயன்பட்டதாய் இந்த சூர்ணிக்கொத்து விளங்கியுள்ளதை காணமுடிகின்றது. அன்பர்களுக்கு அதனை வழங்குவதில் மகிழ்ச்சி
அடைகின்றேன்.

அன்பன் கி.லோகநாதன்
----------------------------

சூர்ணிக்கொத்து
பொதுவதிகாரம்: பிரமாணவியல்
முதல் சூத்திரம்
1. சகம் பிறப்பு இருப்பு இறப்பாகிய முத்தொழிலையுடையது
2. அது அரனாலே உடையது
3. மற்ற இருவரும் முத்தொழில் படுவர்கள்
இரண்டாம் சூத்திரம்
1. அரன் உயிர்களின் இரண்டற நிற்பன்
2. உயிர்களுக்குக் கன்மப்பலனை அரனே கொடுப்பன்
3.உயிர்கள் அச்சு மாறியே பிறக்கும்.
4. அரன் சருவ வியாபகன்.
மூன்றாம் சூத்திரம்
1. இல்லை என்கிற அறிவுடனே செல்லுகையினாலே அறி உயிர் உண்டு.
2. எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாகச் சொல்லுகையினாலே, உடற்கு வேறாய் உயிர் உண்டு.
3. ஐந்தையும் ஒருவனே அறிதலின், ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கும் வேறாய் உயிர் உண்டு.
4. கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினாலே அக் கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு.
5. நித்திரையிலும் பிராணவாயுத் தொழில் பண்ணவும் சரீரத்துக்குப் புசிப்பும் தொழிலும் இல்லாதபடியினாலே, பிராண வாயுவுக்கு
வேறாய் உயிர் உண்டு.

6. மறந்து மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு.
7. எல்லாத் தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினாலே, அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறாய் உயிர் உண்டு.
பொதுவதிகாரம்: இலக்கணவியல்
நான்காம் சூத்திரம்.
1. அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றித் தொழில் இல்லாதபடியினாலே, அந்தக்கரணங்களுக்கு வேறாய் உயிர்
உண்டு.

2. மலமறைப்பால் உயிருக்கு அறிவு இல்லை
3. உயிர் மூன்று அவத்தைப்படும்.
ஐந்தாம் சூத்திரம்
1. உயிராலே தத்துவங்கள் எல்லாம் தொழில் செய்யும்.
2. அரனாலே உயிர்களெல்லாம் அறியும்.
ஆறாம் சூத்திரம்.
1. உயிர் அறிவினாலே அறியப்பட்டதெல்லாம் அழியும்.
2. அப்பிரமேயமாக அறியப்பட்டவனே அரன்.
உண்மை அதிகாரம்: சாதனவியல்
ஏழாம் சூத்திரம்.
1. அரன் பாசத்தை அனுபவியான்.
2. பாசம் அரனை அனுபவியாது.
3. உயிர் அவ் அரனை அடையும்; அனுபவிக்கும்.
எட்டாம் சூத்திரம்.
1. உயிருக்கு நல்லறிவு தவத்தினாலேயே வரும்.
2. உயிருக்குச் சற்குருவாய் வருவது அரனே.
3. உயிர் பஞ்சேந்திரியங்களைப் பற்றுகையினாலே தன்னையும் அறியமாட்டாது.
4. உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால் தன்னையும் அறியும்.
ஒன்பதாம் சூத்திரம்.
1. உயிர் அரன் ஞானத்தினாலேயே அரனைக் காணும்.
2. உயிர் பாசத்திலே பற்றற்றால், அரன் வெளிப்படுவன்.
3. பஞ்சாட்சரசெபம் பண்ணினல் வாசனாமலம் போம்.
உண்மை அதிகாரம்: பயனியல்
பத்தாம் சூத்திரம்.
1. அரனுடன் ஒன்றாகி நில்.
2. உன்தொழிலெல்லாம் அரன் பணி என்று கொள்.
பதினொன்றாம் சூத்திரம்.
1. ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அனுபவிப்பன்.
2. அரனை மறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஐக்கியமாய்ப் போவன்.
பன்னிரண்டாம் சூத்திரம்.
1. மும்மலங்களையும் களைக.
2. சிவஞானிகளுடனே கூடுக.
3. சிவஞானிகளையும் சிவலிங்கத்தையும் சிவனெனவே தேறி வழிபடுக.
4. வழிபடாமையை ஒழிக.
ஆகச் சூத்திரம் 12க்கு சூர்ணிக்கொத்து 39
(முற்றும்)
அன்பன் கி.லோகநாதன்   
நன்றி
 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design