திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Wednesday, September 29, 2010

திருமூலர் அருளியது அக்கினி காரியம்

11.. அக்கினி காரியம்



214.
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1

215.
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே. 2

216.
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 3

217.
போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 4

218.
நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே. 5

219.
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. 6

220.
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே. 7

221.
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. 8

222.
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 9

223.
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 10

12.. அந்தண ரொழுக்கம்
224.
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 1

225.
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே. 2

226.
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 3

227.
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே. 4

228.
சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. 5

229.
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. 6

230.
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 7

231.
சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே. 8

232.
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 9

233.
மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதொ஢ந்து அந்தண ராமே. 10

234.
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 11

235.
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. 12

236.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே. 13

237.
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. 14

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design