திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Wednesday, September 29, 2010

திருமூலர் அருளியது (.இராச தோடம்.).

13.. அரசாட்சி முறை .(.இராச தோடம்.).



238.
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே. 1

239.
நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. 2

240.
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே. 3

241.
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. 4

242.
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 5

243.
ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 6

244.
திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே. 7

245.
வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 8

246.
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. 9

247.
தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே. 10

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design