திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Wednesday, September 29, 2010

திருமூலர் அருளியது 10ம் திருமறை - திருமந்திரம் - 1

10ம் திருமறை - 


திருமந்திரம் - 1


திருமூலர் அருளியது



விநாயகர் காப்பு




ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.




பாயிரம்


1.. கடவுள் வாழ்த்து

1.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1

2.
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2

3.
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

4.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

5.
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5

6.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

7.
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7

8.
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8

9.
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9

10.
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

11.
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11

12.
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12

13.
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13

14.
கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14

15.
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15

16.
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16

17.
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17

18.
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18

19.
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 19

20.
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே. 20

21.
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21

22.
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 22

23.
வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 23

24.
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24

25.
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25

26.
தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26

27.
சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27

28.
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28

29.
காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29

30.
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30

31.
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31

32.
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32

33.
பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33

34.
சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34

35.
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35

36.
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36

37.
நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37

38.
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38

39.
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39

40.
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40

41.
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41

42.
போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42

43.
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43

44.
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44

45.
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45

46.
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46

47.
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47

48.
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48

49.
நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49

50.
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே. 50

51.
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே. 1

52.
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2

53.
இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3

54.
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4

55.
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5

56.
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகல-

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design